"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" என்ற அற்புதமான மேடை நாடகத்தை கண்டு களிக்கும் அரிய வாய்ப்பு நேற்று மாலை கிடைத்தது. சோ ராமசாமி அவர்களால் 1971ம் வருடம் எழுதப்பட்ட ஒரு அரசியல் நையாண்டி நாடகமே "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்".
திரு. சோ அவர்களின் நல்லாசியுடன், திரு. வரதராஜன் குழுவினர் மிகச் சிறந்த முறையில் மேடையேற்றி வருகின்றனர். நாரதராக வரும் திரு. வரதராஜன், அரசியல்வாதி நல்லதம்பியாக வரும் திரு. ரவி, மகாவிஷ்ணுவாக வரும் திரு. ரகு, பாரதியாக வரும் "ரௌத்திரம் பழகிய" திரு. ராமானுஜம் (இவர் என் இனிய நண்பர் மற்றும் நெருங்கிய உறவினர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்), ஒளவையாக வரும் திருமதி. துளசி என ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரத்தை உள்வாங்கி மிகத்திறமையாக நடித்துள்ளனர். இதில் இன்னொரு முக்கிய பாத்திரம் சமயத்திற்கு தகுந்தப்படி பாடும் ரேடியோ, இந்த நவீன நாரதரின் இன்னொரு தம்புரா.
திரு. சோ அவர்கள் எழுதிய எழுத்துக்கள் ஒன்று கூட மாற்றப்படாமல் இன்றும் மேடையேறும் இந்த நாடகம் வெற்றிப் பெற கடுமையாக உழைப்பது திரு. வரதராஜன் குழுவினர் மட்டுமில்லை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசியல்வாதியும் கூட. 42 வருடங்களாக நம் அரசியல் மாறாமல் இன்னும் தரம் தாழ்ந்து போவதை கண்டு தேச பக்தர்களின் உள்ளம் கொதிக்கிறது. இந்த கற்பனை நாடகம் எப்போதோ இருந்த அரசியல் நிலைமையை பிரதிப்பளிப்பதாக மாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு. இதுவே திரு. சோ போன்ற தேச பக்தர்களுக்கு நாம் செய்யும் நன்றி.
சில நாட்களாக உடல் நலம் குன்றி, இப்போது தேறி வரும் திரு. சோ அவர்கள் முழுவதும் குணமாகி, பாரதி சொன்னதுப்போல் "எனக்கு தொழில் எழுத்து, நாட்டுக்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல்" என இன்னுமொரு நூற்றாண்டு இருந்து பாரத மாதாவின் சேவையில் தொடர்ந்து ஈடுபட ஸ்ரீ கிருஷ்ணரின் அனுக்ரகம் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
ஒரு குழல் விளக்கை கோயிலுக்கு கொடுத்தாலும் அதன் ஒளி வெளியே தெரியாத அளவுக்கு "இன்னார் உபயம்" என்று கொட்டை எழுத்தில் எழுதுவோர் மத்தியில் தங்களை விளம்பரபடுத்தாமல் நாடகத்தை எல்லோரும் கண்டு பயன்ப்பெற ஏற்பாடு செய்த தஞ்சை சாஸ்த்ரா பல்கலைகழக துணை வேந்தர் திரு. சேதுராமன் அவர்களுக்கு நன்றி.
வெகு நாட்களுக்குப் பின் ஓர் மிகச் சிறந்த நாடகம் தமிழ்க் கூறும் நல்லுலகக்கு மீண்டும் கிடைத்துள்ளது. இந்த நல்வாய்ப்பை நழுவவிடாமல் அனைவரும் இந்த நாடகத்தை காணுமாறு வேண்டுகிறேன்.
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து.