கர்ணன், மகாபாரதத்தில் வெகுஜனகங்களின் இரக்கத்திற்கு பெரிதும் பாத்திரமானவன். இதுவே அவனது உண்மையான கவசம். அதை உடைக்கும் முயற்சியே இந்த பதிவு.
கர்ணன் என்றதும் பலரின் நினைவுக்கு வரும் மாயத் தோற்றம், அவன் ஓர் மாவீரன், கொடை வள்ளல், தியாகி, செஞ்சோற்று கடனுக்காக தன் சகோதரர்களையே போரில் எதிர்த்தவன் என்பதுதான். இந்த மாயையை விலக்க முயலுவோம்.
வீரம்!!!
வனவாசத்தின்போது, துரியோதனன் பாண்டவர்கள் காட்டில் துன்புறுவதை ரசிக்க விரும்பி, பசு மாடுகளை கணக்கிடும் சாக்கில் கர்ணன், துச்சாதனன் மற்றும் பெரும் படைகளுடன் சென்றான். காட்டில் கௌரவர்களுக்கும் கந்தர்வர்களுக்கும் நடந்த போரில் கர்ணன் உட்பட அனைவரும் படுத்தோல்வி அடைந்தார்கள். தருமபுத்திரன் உத்தரவின் பேரில் பீமனும் அர்ஜுனனும் கர்ணனையும் துரியோதனனையும் மற்றவர்களையும் மீட்டார்கள். அவமானம் தாங்காத துரியோதனன் தற்கொலை செய்துக்கொள்ள முயன்ற போது, கர்ணன் சபதம் செய்தான். "அர்ஜுனனை எப்படியும் கொல்வேன், அதுவரை யார் என்ன கேட்டாலும் கொடுப்பேன்" என்று. இப்படித்தான் கர்ணனின் கொடுக்கும் வழக்கம் ஆரம்பித்தது.
அர்ஜுனன் அஞ்ஞாதவாசம் முடிந்தவுடன் நடந்த போரில் தன்னன்தனியே
பீஷ்மர், துரோணர், கர்ணன், அஸ்வத்தாமா, துரியோதனன், துச்சாதனன், சகுனி என
எல்லோரையும் தோற்கடித்தான். அப்போது எங்கே போயிற்று கர்ணனின் வீரம்? அர்ஜுனன்
தனியே இருக்கும்போதே ஜெயிக்க முடியாத கர்ணன் பாரத போரில் அவனை கொல்வதாக
சபதம் செய்தது துரியோதனனை திருப்தி படுத்தவே அன்றி வேறில்லை.
பாலகன் அபிமன்யுவிடம் தோற்ற மஹாரதர்களான துரோணர், கர்ணன், அஸ்வத்தாமா, துரியோதனன், துச்சாதனன், சகுனி, சல்லியன், முதலியோர் செய்வதறியாமல் திகைத்தார்கள். துரோணரின் ஆலோசனைப்படி அபிமன்யு எல்லாரோடும் ஒரே சமயத்தில் போரிடும் போது "மாவீரன்" கர்ணன் அபிமன்யுவின் பின்புறம் சென்று அவன் வில்லின் நாண் கயிற்றை அறுத்து தன் வீரத்தை முழுமையாய் வெளிப்படித்தினான்.
அடுத்தநாள் அர்ஜுனன் ஜயத்ரதனை கொல்ல சபதமிட்டு முன்னேறி சென்றபின், தருமர், அர்ஜுனனை கண்டு வர பீமனை அனுப்பினார். வழியில் கர்ணன் பீமனை எதிர்த்தான். பீமனால் தோற்கடிக்கப்பட்ட கர்ணன் மயங்கி விழுந்தான். அவனை காக்க தன் தம்பிகள் ஐந்து பேரை துரியோதனன் அனுப்பினான். விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகள் போல அவர்கள் பீமனால் கொல்லப்பட்டார்கள். கர்ணன் சிரமபரிகாரம் செய்துக்கொண்டு ஒரு வழியாக திரும்பவும் பீமனை எதிர்த்தான். மறுபடியும் தோற்று மயங்கி விழ கர்ணனின் தேர்ரொட்டி அவனை போர்க்களத்திலிருந்து அப்புறபடுத்தினான். அதற்குள் துரியோதனன் இன்னும் ஐந்து தம்பிகளை கர்ணன் துணைக்கு அனுப்ப அவர்களும் பீமனால் கொல்லப்பட்டார்கள். கர்ணன் திரும்பவும் போருக்கு வந்தான். திரும்பவும் தோற்று மயங்கி விழுந்தான். இதுபோல கர்ணன் ஏழு முறை பீமனிடம் தோற்று மயங்க அவனுக்கு துணையாக வந்த துரியோதனனின் 35 தம்பிகள் பீமனால் அந்த ஒரு பகல் பொழுதில் கொல்லப்பட்டார்கள். இதை சஞ்சயன் சொல்ல கேட்ட திருதராஷ்ட்ரன் அழுது புலம்பினான். "இந்த கர்ணனின் வில்லை நம்பி பாண்டவர்களை பகைத்துக்கொண்ட துரியோதனன் இப்போது என்ன சொல்கிறான். கர்ணனை காக்க என் பிள்ளைகள் 35 பலியானார்களே" என்று கதறினான். இப்படித் தன் உயிரை காத்துக்கொள்ள உயிர் தோழனின் 35 சகோதரர்களை பலி வாங்கிய மாவீரன் தான் கர்ணன்.
துரோணர் மாண்டவுடன் கர்ணன் தளபதியாக பதவி ஏற்றான். அவன் கண் முன்னாலே அவன் பிள்ளையை அர்ஜுனன் கொன்றான். அதுவும் "தனியாக நின்ற அபிமன்யுவை நீங்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கொன்றீர்களே! இப்போது உன் பிள்ளையை நான் உன் கண் முன்பே கொல்லப்போகிறேன். முடிந்தால் உன் பிள்ளையை காப்பாற்றிக்கொள்." என்று அறைகூவல்விடுத்து பின் கர்ணன் மகன் வ்ருக்ஷஷேணனை கொன்றான்.
ஆண்களிடம் இப்படி வீரம் காட்டிய கர்ணன், பெண்ணான திரௌபதியை சபையில் அவமானப்படுத்த முயன்ற விதம் பற்றி பதிவு செய்ய என் விரல்கள் கூசுகின்றன.
இப்படி கர்ணனின் வீரத்தைப் பற்றி இன்னும் எவ்வளவோ எழுதலாம், ஆனால் வலைபதிவில் இடம் போதாது. ஆகையால் அவனது மற்ற குணாதிசயங்களை(!) பார்ப்போம்.
கொடை
கர்ணன் கொடுத்ததை விட வாங்கியது அதிகம். முதலில் அங்க தேசத்தை துரியோதனிடம் யாசகமாக வாங்கினான். பின்னர் பிராமணன் என்று பொய் சொல்லி வில்வித்தையை ஸ்ரீ பரசுராமரிடம் திருட்டுத்தனமாக வாங்கினான். (இங்கே கவனிக்க வேண்டியது, தான் ஒரு தேரோட்டி மகன் என்று நேர்மையாக சொல்லியிருந்தால் பரசுராமர் சந்தோஷமாக சொல்லிகொடுத்திருப்பார். அவரது கோபம் க்ஷத்ரியர்கள் மீதே, மற்ற எல்லோரையும் அவர் அரவணைத்தார். அவரை ஏமாற்றியது கர்ணனின் குறுக்கு புத்தியே)
வாங்குவதில் மட்டுமல்ல பண்டமாற்று வியாபாரத்திலும் வல்லவன் கர்ணன். முன்பே கண்டபடி கர்ணன் செய்த சபதம் "அர்ஜுனனை கொல்வேன்; அது வரை யார் என்ன கேட்டாலும் கொடுப்பேன்" என்ற சபத்தினால் இந்திரன் கேட்டதும் தான் கவச குண்டலங்களை கொடுக்க வேண்டி வந்தது. இது நடந்தது பாண்டவர்கள் வனவாசத்தின் போதே. கர்ணன் மட்டும் பிறந்து முதல் அள்ளி வழங்குபவனாக இருந்திருந்தால் இந்திரன் எப்போதோ அவனிடமிருந்து கவச குண்டலங்களை வாங்கிருப்பான்.
கவசம் ஒரு தற்காப்பு பொருள். அதைக் கொடுத்துவிட்டு பதிலுக்கு இந்திரனின் சக்தி ஆயுதத்தை வாங்கிக்கொண்டான். சக்தி ஆயுதம் யாரையும் கொல்லக்கூடியது. அர்ஜுனனை கொல்ல அதை வாங்கியவன் போரில் துரியோதனன் உத்தரவுப்படி கடோத்கஜனை அதைக்கொண்டு கொன்றான்.
தன் தாய் குந்திக்கு வரம் கொடுதைப்பற்றி பார்ப்போம். முதல் வரம் நாகாஸ்திரத்தை மறுபடி விடக்கூடாது. போரில் வீரர்கள் ஒரு போதும் தோற்ற அஸ்திரத்தை மறுபடி விடமாட்டார்கள். கர்ணனிடம் இந்த வரம் கேட்டதிற்கு காரணமே அவன் வீரத்தில் உள்ள சந்தேகம்தான். எப்படியும் அர்ஜுனனை ஜெயிக்க வேணும் என்று பொறாமையே உருவெடுத்தவன் கர்ணன் என்று குந்திக்கு தெரியும், அதனால் தான் அந்த வரம் கேட்டாள். கர்ணன் எத்தனை முறை நாகாஸ்திரம் விட்டாலும் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனை காப்பாற்றியிருப்பார். இந்த நாகாஸ்திரமும் கர்ணன் தவம் செய்து பெற்றதில்லை. அர்ஜுனனை பழிவாங்க துடித்த ஒரு பாம்பு அம்பாக மாறி கர்ணனிடம் வந்து சேர்ந்தது. ஸ்ரீ கிருஷ்ணர் அனுமதி கொடுத்திருந்தால் அர்ஜுனன் தான் தவம் செய்து பெற்ற பாசுபத அஸ்த்திரத்தால் கர்ணனை எப்போது வேண்டுமானாலும் வீழ்த்தியிருக்கலாம்.
அர்ஜுனனை தவிர மற்ற நான்கு பாண்டவர்களை கொல்லக்கூடாது என்ற வரம் தருமர், நகுலன் மற்றும் சகதேவனை காக்க உதவியது என்னமோ உண்மைதான். அதற்க்கு பதில் செய்வது போல "கர்ணனை கொல்வேன்" என்ற அர்ஜுனன் சபதம் கர்ணனின் உயிரை பல முறை பீமனிடமிருந்தும் ஒரு முறை அபிமன்யுவிடமிருந்தும் காத்தது.
கடைசியில் தான் செய்த புண்ணியம் அனைத்தையும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு தானம் கொடுதைப் பார்ப்போம். கர்ம வினையே தீண்டாத ஸ்ரீ கிருஷ்ணருக்கு கர்ணனின் புண்ணியம் எதற்கு? கர்ணனின் பாவங்களை எல்லாம் தொலைத்த ஸ்ரீ கிருஷ்ணர் அவன் புண்ணியத்தையும் தொலைத்தால் தான் கர்ணனுக்கு முக்தி கிடைக்கும் என்பதால் தான் அப்படி செய்தார். இங்கேயும் கர்ணனின் பண்டமாற்று வியாபாரம் பெருத்த இலாபத்தை தான் கொடுத்தது. வெறும் புண்ணியத்தை கொடுத்துவிட்டு எளிதில் கிடைக்காத ஸ்ரீ கிருஷ்ணரின் விஸ்வரூபத்தை தரிசித்து முக்தியும் பெற்றான்.
செஞ்சோற்றுக்கடன்
துரியோதனனும் கர்ணனும் கொண்ட நட்பு கூடா நட்பாகும். அர்ஜுனன் மேலுள்ள பொறாமை கர்ணனை துரியோதனனினடம் தள்ள, பீமனிடம் கொண்ட பயமும் அர்ஜுனனின் வில்லாற்றலும் துரியோதனை கர்ணன் பாலிழுத்தது.
ஒரு வேளை கர்ணன் பாண்டவர்கள் பக்கம் வந்திருதால் ஹஸ்தினாபுர அரசு அவனக்கு கிடைத்திருக்கும் என்று சொல்வோர்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். கர்ணன் குந்தியின் மகனே தவிர பாண்டுவின் பிள்ளை இல்லை. குந்தியின் திருமணத்திருக்கு முன்பே பிறந்தவன். அவன் அரசனாவதை பீஷ்மர் ஒரு போதும் ஒத்துக்கொள்ளமாட்டார். அதே போல எதிரிகளான பாண்டவர்களை விட்டாலும், துரோகியான கர்ணனை துரியோதனன் சும்மா விட மாட்டான். கூட்டிக்கழித்து பார்த்தால் கூடாநட்பு தான் தெரிகிறதே தவிர செஞ்சோற்றுக்கடன் என்பது வெறும் அரசியல் சாயமே.
சுருங்க சொன்னால் கர்ணனின் பெருமைகளாக சொல்லப்படும் கவச குண்டலம், நாகாஸ்திரம், அங்க தேசம், செல்வம் என எல்லாமே பிறவியிலோ, தானாகவோ அல்லது தானமாகவோ அவன் பெற்றவைதான். அவனாக உழைத்து சம்பாதித்தவை என்று எதுவும் இல்லை நம் இரக்கத்தை தவிர.
மொத்தத்தில் அர்ஜுனன் என்ற புலியை பார்த்து சூடுப் போட்டுக்கொண்ட பூனை தான் கர்ணன். எல்லா உயிர்களையும் காக்கும் பரந்தாமன் ஸ்ரீ கிருஷ்ணன் புலியான அர்ஜுனனையும் காத்தான். பூனையான கர்ணனையும் காத்தான். அந்த ஸ்ரீ கிருஷ்ணன் எப்போதும் அடியார்களான நம்மையும் அவன் திருவடித் தாமரைகள்ப்பட்ட பாரத தேசத்தையும் காப்பான்.
ஒரு வேண்டுகோள்
நம் பாரத தேசத்தின் இரண்டு கண்களான ஸ்ரீமத் ராமாயணத்தையும் மஹா பாரத்தையும் அனைவரும் கசடற கற்க வேண்டும். திரைப்பட கதாநாயகரின் பெருமையை பாதுகாக்க காப்பியத்தை எப்படி வேண்டுமானாலும் வளைக்கும் "கர்ணன்" திரைப்படம் போன்ற குறுக்கு வழிகளை நாடாமல், மூல ஆதி இதிகாசங்களான வால்மீகி ராமாயணம் வியாச பாரதம் ஆகியவற்றை படிக்குமாறு பிராத்திக்கிறேன். "கர்ணன்" திரைபடத்தில், விட்டிருந்தால் தமிழ் திரைப்பட மரபுப்படி அர்ஜுனனை போரில் கொன்றாலும் கொன்றிருப்பார்கள், அந்த மட்டில் மூல மகாபாரதத்தையோட்டி படமேடுததற்க்கு நன்றி.
தமிழில் கம்ப ராமாயணமும் வில்லி பாரதமும் கட்டாயம் படிக்க வேண்டிய பொக்கிஷங்கள். இன்னும் சுலபமான வழி வேண்டுவோர் ராஜாஜியின் ராமாயண மகாபாரத நூல்களையோ அல்லது சோ. ராமஸ்வாமி அவர்களின் ராமாயண மகாபாரத நூல்களையோ படிக்க வேண்டுகிறேன்.
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து.