Showing posts with label Literature. Show all posts
Showing posts with label Literature. Show all posts

Sunday, April 1, 2012

வள்ளுவமும் வைணவமும்

உலகப் பொதுமறை என போற்றப்படும் திருக்குறளில், திருமால் பெருமை எவ்விதம் எடுத்து கூறப்பட்டுள்ளது என்பதை ஆராயும் சிறு முயற்சியே அடியேனுடைய இந்த பதிவு.

திருவள்ளுவர் எந்த மதத்தை சார்ந்தவர் என்பதை பல நூற்றாண்டுகளாக சான்றோர் விவாதித்து வருகின்றனர். கொஞ்சம் கூட ஸ்ரீ வைஷ்ணவ அறிவோ திருக்குறள் புலமையோ இல்லாத அடியேன், இவ்வளவு பெரிய விஷயத்தை ஆராய முயலுவதை என்னவென்று சொல்வது? அடியேனிடமும் கணிப்பொறியிருக்கும் அசட்டு துணிச்சல்தான் என்பதை தவிர வேறன்ன?

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (1)

என தன் நூலை தொடங்கும் வள்ளுவர் முதற் குறட்பாவிலேயே மிக உயர்ந்த ஸ்ரீ வைஷ்ணவ தத்துவத்தை விளக்க ஆரம்பித்துவிட்டார்.

அகாரார்தோ விஷ்ணுஹு ஜகதுதாய ரக்ஷா பிரளய க்ருத்
மகாரார்தோ ஜீவாஹ ததுபகரணம் வைஷ்ணவமிதம்
உகாரூனஞார்ஹம் நியமயதி சம்பந்தமனயோஹ்
த்ரயி சாரஹா த்ரயாத்மா பிரணவ இமமார்த்தம் சமதிஷாத்

மேலே சொல்லப்பட்ட சமஸ்க்ருத ஸ்லோகத்தின் பொருள் யாதெனின், ஓம் எனும் பிரணவம் 'அ' 'உ' 'ம' எனும் மூன்று எழுத்துக்களின் சங்கமமேயாகும். இதில் 'அ' என்கிற எழுத்து ஸ்ரீ மஹா விஷ்ணுவையும் 'ம' என்கிற எழுத்து ஜீவாத்மாக்களான நம்மையும் குறிக்கும். 'உ' என்கிற எழுத்து பரமாத்மாவான ஸ்ரீமன் நாராயணனுக்கும் ஜீவாத்மாக்களான நமக்கும் உள்ள தொடர்பைக் குறிக்கும். ஜாதி வேறுபாடுகளையும் அது செய்யும் கொடுமைகளையும் தீவிரமாக எதிர்க்கும் ஸ்ரீ வைஷணவம் எல்லா உயிர்களையும் ஒன்றாக பார்க்கும் சம நோக்கையே போதிக்கிறது. எல்லா உயிர்களும் சரணடைவது ஸ்ரீமன் நாராயணனையே. அந்த திருமாலே உலகம் யாவையும் தோற்றுவித்து, காத்து, பின் பிரளய காலத்தில் தன் திருவயிற்றில் வைத்து காக்கின்றான்.

திருக்குறளுக்கு வருவோம். திருமாலே உலகத்திற்கு முதலானவன் என்று சொல்லப்புகுந்த வள்ளுவர் அந்த ஆதி பகவானான ஆதி நாராயணனை குறிக்கும் அகரத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டு 'எப்படி அ எழுத்துக்கெல்லாம் முதன்மயானோதோ அது போல திருமால் உலகுக்கெல்லாம் முதன்மையானவன். அவனோ ஆதி நாராயணனன், அவன் தேவியோ ஆதி லக்ஷ்மி. அவன் தொண்டனோ ஆதிசேஷன் - முதல் தொண்டன். இப்படி எல்லாம் ஆதியாக எல்லாவற்றுக்கும் ஆதியாக இருப்பது திருமாலே என்பது வள்ளுவர் வாக்கு.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (3)

திருமால் ஐந்து நிலைகளில் உறைகிறான். 1.பர- ஸ்ரீ வைகுந்தத்தில் இருக்கும் ஸ்ரீ பரமபத நாதன் 2. வியுஹ - திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்ட திருக்கோலம். 3. விபவ - ஸ்ரீ ராம, ஸ்ரீ கிருஷ்ண, லக்ஷ்மி வரா ஹ, லக்ஷ்மி நரசிம்ஹ அவதாரங்களாய் இந்த புண்ணியமான பாரத தேசத்தில் தோன்றியது. 4. அந்தர்யாமி - அடியார்களான நம் மனதில் அவரவர் கட்டை விரலளவு ஸ்ரீமன் நாராயணர் எப்போது வீற்றிப்பது 5. அர்ச்சை - திருவரங்கம், திருமலை, திருவல்லிக்கேணி முதலிய திவ்யதேசங்களிலும் மற்ற கோயில்களிலும் எழுந்தருளியிருக்கும் விக்ரஹ திருமேனிகள்.


இந்த ஐவற்றுள் ஐயன் வள்ளுவர் மேற்சொன்ன குறளில் குறிப்பிடுவது அந்தர்யாமி நிலையை. அடியார்களின் அகமாகிய தாமரையில் வீற்றிருக்கும் திருமாலின் திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இந்த பூமியில் நீண்ட நாட்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்வர்.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (7)


திருமாலிடம் எல்லாம் உண்டு, ஒன்றை தவிர. அவன் அநாதன். அவன் எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் நாதன் அவனுக்கு நாதன் கிடையாது. மஹாபலி சக்ரவர்த்தியிடம் இந்திரனுக்காக மூன்றடி நிலம் கேட்கப்போன குரளனான ஸ்ரீ வாமனன் தன்னை அநாதன் என்று கூறி அறிமுகப்படித்திக் கொள்கிறான். மஹாபலி 'அனாதை' என்று புரிந்துகொள்ள அவன் குரு சுக்ரசாரியார் வந்திருப்பவன் 'அனாதை' அல்ல; தனக்கு ஒரு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத, தலைவன் அதாவது நாதன் இல்லாத, திருமால் என்று புரிய வைக்கிறார்.


ப்ர ஹலாதனுக்கு கொடுத்த வரத்தின்படி அவன் பேரனான மஹாபலியை ஸ்ரீ வாமனன் கொல்லவில்லை. அதே காரணத்தினால் தான் ப்ரஹலாதனின் வழி வந்த பாணசுரனை ஸ்ரீ கிருஷ்ணரும் கொல்லவில்லை.

கலியுகமாகிய இன்றும், தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஸ்ரீ ஒப்பிலியப்பனை நாம் கும்பகோணம் அருகே திருவிண்ணகர் என்ற ப்ரசித்தி பெற்ற திவ்ய தேசத்தில் சேவிக்கலாம். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத திருமாலின் திருவடியை சேர்த்தவர்கள் தவிர மற்றவர்களுக்கு தங்கள் மனக்கவலை மாறாது என்கிறார் திருவள்ளுவர்.


கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை (9)


எவனொருவனின் தலை எண்குணதானின் திருவடிகளை வணங்கவில்லையோ அவனுக்கு ஐம்பொறிகளான கண், காது, வாய், மூக்கு, மெய் முதலியவற்றால் பயன் ஏதுமில்லை. இங்கு 'எண்குணத்தான்' எனும் சொல் 8 குணங்களையும் குறிக்கும் எண்ணிறைந்த குணங்களையும் குறிக்கும்.


ஸ்ரீமன் நாராயணன் அநேக கல்யாண குணங்கள் நிரம்பியவர். அதனாலேயே தமிழில் 'நம்பி' என்றும் வடமொழியில் 'குணபூர்னர்' என்றும் அழைக்கபடுகிறார்.


ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், சக்தி, தேஜஸ், சௌசீல்யம், வாத்சல்யம் என்கிற முக்கிய 8 குணங்களும் மேலும் மார்தவம், ஆர்ஜவம், சௌஹர்தம், சாம்யம், காருண்யம், மாதுர்யம், காம்ப்ஹீர்யம், ஔதார்யம், சாதுர்யம், ச்தைர்யம், தைர்யம், சௌர்யம், பராக்கிரமம், சத்யகாமம், சத்யசங்கல்பம், க்ருதித்வம், க்ருதங்க்னதை, மற்றும் பலப்பல கல்யாண குணங்களை தன்னிடையே கொண்டான் கொண்டல்வண்ணனான கண்ணன், கேசவன், மாதவன் என பல நாமம்கள் கொண்ட திருமால். இந்த கல்யாண குணங்கள் பற்றித்தான் திருவள்ளுவர் மேற்படி குறளில் விளக்கியுள்ளார்.


இன்னும் கடவுள் வாழ்த்து அதிகாரத்திலுள்ள மற்ற குறள்களையும் விரிவாக சொல்லலாம். ஆயினும் மற்ற அதிகாரங்களும் இருப்பதால் அவற்றை பார்ப்போம்.


மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு (61௦)

மடி இன்மை அதாவது சோம்பலில்லாமை பற்றி பாடவந்த வள்ளுவர், மஹா விஷ்ணு வாமனனாக வந்து பின்னர் நெடு நெடுவென வளர்ந்து த்ரிவிக்ரமனாக விண்ணையும் மண்ணையும் தன் திருவடிகளால் அளந்தது போல சோம்பல் இல்லாத மன்னவன் இந்த உலகம் முழுவதையும் அடைவான் என்கிறார்.

அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் குறள்கள் கண்ட நாம் காமத்துப்பாலில் வள்ளுவரின் வைணவ குரல்களைப் பார்ப்போம்.


தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு (1103)


புணர்ச்சி மகிழ்தல் பற்றி பாடவந்த வள்ளுவர், தன் காதல் மனைவியின் தோளில் தூங்குவதைவிட பங்கஜாக்சன் என்றும் தாமரைக்கண்ணன் என்றும் பெயர்க் கொண்ட திருமாலின் வைகுந்தம் இனிதாக இருக்குமோ? என்று கேள்வி எழுப்புகிறார் காதல் வசப்பட்ட வள்ளுவர். இங்கு காதலை உயர்த்தி சொல்ல விரும்பும் போதும் தன் அடிப்படை குணத்தை காட்டும் விதமாக வைணவர்களின் ஒரே இலக்கான ஸ்ரீ வைங்குந்தம் எனும் திருநாட்டைப் பற்றித்தான் குறிபிடுகிறார்.


அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)


தலைவனுக்காக காத்திருக்கும் தலைவி பகற்பொழுதுப்போய் மாலைப்பொழுது வந்ததன் அடையாளமாக சொல்லுவது யசோதை இளஞ்சிங்கம் கண்ணன் மாடுமேய்க்கும் போது ஊதும் புல்லாங்குழலைத்தான். இங்கே கண்ணனே தலைவன் ராதை முதலிய கோபிகைகளே தலைவிகள். மாலைப்பொழுது வந்துவிட்டது, தூரத்தில் கண்ணன் குழலோசை கேட்கிறது, ஆனால் கண்ணன் இன்னும் இங்கே வரவில்லை. கோபிகைகள் காத்திருக்கிறார்கள் கண்ணனுக்காக.


முடிவுரை


திருவள்ளுவரின் திருக்குறள் எனும் அமுதில் சில பருக்கைகளை நாம் பதம் பார்த்தே அவர் உள்ளக்கிடக்கை அறிந்துக் கொண்டோம்.

ஒரு காலதில் தொடர்ந்து 10 குறள்களைக்கூட சொல்லத் தெரியாமல் வெட்கி தலை குனிந்த அடியேன், (இப்போது எவ்வளவு குறள்கள் சொல்லத்தெரியும் என்று தயவு செய்து கேட்டு விடாதீர்கள், அது பரம ரகசியம்) இன்று ஓரளவு படித்து, ஸ்ரீ வைஷ்ணவ சிகாமணியான திருவள்ளூர் இயற்றிய திருக்குறளைப் பற்றி ஒரு சில வார்த்தைகளை இங்கு பணிவோடு சமர்பிக்க காரணமான ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடிகளுக்கு இந்த பதிவை சமர்ப்பித்து திருமாலுக்கும் திருவள்ளுவருக்கும் பல்லாண்டு பாடி அமைகிறேன்.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து.