Sunday, June 3, 2012

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" என்ற அற்புதமான மேடை நாடகத்தை கண்டு களிக்கும் அரிய வாய்ப்பு நேற்று மாலை கிடைத்தது. சோ ராமசாமி அவர்களால் 1971ம் வருடம் எழுதப்பட்ட ஒரு அரசியல் நையாண்டி நாடகமே "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்".

திரு. சோ அவர்களின் நல்லாசியுடன், திரு. வரதராஜன் குழுவினர் மிகச் சிறந்த முறையில் மேடையேற்றி வருகின்றனர். நாரதராக வரும் திரு. வரதராஜன், அரசியல்வாதி நல்லதம்பியாக வரும் திரு. ரவி, மகாவிஷ்ணுவாக வரும் திரு. ரகு, பாரதியாக வரும் "ரௌத்திரம் பழகிய" திரு. ராமானுஜம் (இவர் என் இனிய நண்பர் மற்றும் நெருங்கிய உறவினர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்), ஒளவையாக வரும் திருமதி. துளசி என ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரத்தை உள்வாங்கி மிகத்திறமையாக நடித்துள்ளனர். இதில் இன்னொரு முக்கிய பாத்திரம் சமயத்திற்கு தகுந்தப்படி பாடும் ரேடியோ, இந்த நவீன நாரதரின் இன்னொரு தம்புரா.

திரு. சோ அவர்கள் எழுதிய எழுத்துக்கள் ஒன்று கூட மாற்றப்படாமல் இன்றும் மேடையேறும் இந்த நாடகம் வெற்றிப் பெற கடுமையாக உழைப்பது திரு. வரதராஜன் குழுவினர் மட்டுமில்லை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசியல்வாதியும் கூட. 42 வருடங்களாக நம் அரசியல் மாறாமல் இன்னும் தரம் தாழ்ந்து போவதை கண்டு தேச பக்தர்களின் உள்ளம் கொதிக்கிறது. இந்த கற்பனை நாடகம் எப்போதோ இருந்த அரசியல் நிலைமையை பிரதிப்பளிப்பதாக மாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு. இதுவே திரு. சோ போன்ற தேச பக்தர்களுக்கு நாம் செய்யும் நன்றி.

சில நாட்களாக உடல் நலம் குன்றி, இப்போது தேறி வரும் திரு. சோ அவர்கள் முழுவதும் குணமாகி, பாரதி சொன்னதுப்போல் "எனக்கு தொழில் எழுத்து, நாட்டுக்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல்" என இன்னுமொரு நூற்றாண்டு இருந்து பாரத மாதாவின் சேவையில் தொடர்ந்து ஈடுபட ஸ்ரீ கிருஷ்ணரின் அனுக்ரகம் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

ஒரு குழல் விளக்கை கோயிலுக்கு கொடுத்தாலும் அதன் ஒளி வெளியே தெரியாத அளவுக்கு "இன்னார் உபயம்" என்று கொட்டை எழுத்தில் எழுதுவோர் மத்தியில் தங்களை விளம்பரபடுத்தாமல் நாடகத்தை எல்லோரும் கண்டு பயன்ப்பெற ஏற்பாடு செய்த தஞ்சை சாஸ்த்ரா பல்கலைகழக துணை வேந்தர் திரு. சேதுராமன் அவர்களுக்கு நன்றி.

வெகு நாட்களுக்குப் பின் ஓர் மிகச் சிறந்த நாடகம் தமிழ்க் கூறும் நல்லுலகக்கு மீண்டும் கிடைத்துள்ளது. இந்த நல்வாய்ப்பை நழுவவிடாமல் அனைவரும் இந்த நாடகத்தை காணுமாறு வேண்டுகிறேன்.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து.

Sunday, April 1, 2012

வள்ளுவமும் வைணவமும்

உலகப் பொதுமறை என போற்றப்படும் திருக்குறளில், திருமால் பெருமை எவ்விதம் எடுத்து கூறப்பட்டுள்ளது என்பதை ஆராயும் சிறு முயற்சியே அடியேனுடைய இந்த பதிவு.

திருவள்ளுவர் எந்த மதத்தை சார்ந்தவர் என்பதை பல நூற்றாண்டுகளாக சான்றோர் விவாதித்து வருகின்றனர். கொஞ்சம் கூட ஸ்ரீ வைஷ்ணவ அறிவோ திருக்குறள் புலமையோ இல்லாத அடியேன், இவ்வளவு பெரிய விஷயத்தை ஆராய முயலுவதை என்னவென்று சொல்வது? அடியேனிடமும் கணிப்பொறியிருக்கும் அசட்டு துணிச்சல்தான் என்பதை தவிர வேறன்ன?

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (1)

என தன் நூலை தொடங்கும் வள்ளுவர் முதற் குறட்பாவிலேயே மிக உயர்ந்த ஸ்ரீ வைஷ்ணவ தத்துவத்தை விளக்க ஆரம்பித்துவிட்டார்.

அகாரார்தோ விஷ்ணுஹு ஜகதுதாய ரக்ஷா பிரளய க்ருத்
மகாரார்தோ ஜீவாஹ ததுபகரணம் வைஷ்ணவமிதம்
உகாரூனஞார்ஹம் நியமயதி சம்பந்தமனயோஹ்
த்ரயி சாரஹா த்ரயாத்மா பிரணவ இமமார்த்தம் சமதிஷாத்

மேலே சொல்லப்பட்ட சமஸ்க்ருத ஸ்லோகத்தின் பொருள் யாதெனின், ஓம் எனும் பிரணவம் 'அ' 'உ' 'ம' எனும் மூன்று எழுத்துக்களின் சங்கமமேயாகும். இதில் 'அ' என்கிற எழுத்து ஸ்ரீ மஹா விஷ்ணுவையும் 'ம' என்கிற எழுத்து ஜீவாத்மாக்களான நம்மையும் குறிக்கும். 'உ' என்கிற எழுத்து பரமாத்மாவான ஸ்ரீமன் நாராயணனுக்கும் ஜீவாத்மாக்களான நமக்கும் உள்ள தொடர்பைக் குறிக்கும். ஜாதி வேறுபாடுகளையும் அது செய்யும் கொடுமைகளையும் தீவிரமாக எதிர்க்கும் ஸ்ரீ வைஷணவம் எல்லா உயிர்களையும் ஒன்றாக பார்க்கும் சம நோக்கையே போதிக்கிறது. எல்லா உயிர்களும் சரணடைவது ஸ்ரீமன் நாராயணனையே. அந்த திருமாலே உலகம் யாவையும் தோற்றுவித்து, காத்து, பின் பிரளய காலத்தில் தன் திருவயிற்றில் வைத்து காக்கின்றான்.

திருக்குறளுக்கு வருவோம். திருமாலே உலகத்திற்கு முதலானவன் என்று சொல்லப்புகுந்த வள்ளுவர் அந்த ஆதி பகவானான ஆதி நாராயணனை குறிக்கும் அகரத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டு 'எப்படி அ எழுத்துக்கெல்லாம் முதன்மயானோதோ அது போல திருமால் உலகுக்கெல்லாம் முதன்மையானவன். அவனோ ஆதி நாராயணனன், அவன் தேவியோ ஆதி லக்ஷ்மி. அவன் தொண்டனோ ஆதிசேஷன் - முதல் தொண்டன். இப்படி எல்லாம் ஆதியாக எல்லாவற்றுக்கும் ஆதியாக இருப்பது திருமாலே என்பது வள்ளுவர் வாக்கு.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (3)

திருமால் ஐந்து நிலைகளில் உறைகிறான். 1.பர- ஸ்ரீ வைகுந்தத்தில் இருக்கும் ஸ்ரீ பரமபத நாதன் 2. வியுஹ - திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்ட திருக்கோலம். 3. விபவ - ஸ்ரீ ராம, ஸ்ரீ கிருஷ்ண, லக்ஷ்மி வரா ஹ, லக்ஷ்மி நரசிம்ஹ அவதாரங்களாய் இந்த புண்ணியமான பாரத தேசத்தில் தோன்றியது. 4. அந்தர்யாமி - அடியார்களான நம் மனதில் அவரவர் கட்டை விரலளவு ஸ்ரீமன் நாராயணர் எப்போது வீற்றிப்பது 5. அர்ச்சை - திருவரங்கம், திருமலை, திருவல்லிக்கேணி முதலிய திவ்யதேசங்களிலும் மற்ற கோயில்களிலும் எழுந்தருளியிருக்கும் விக்ரஹ திருமேனிகள்.


இந்த ஐவற்றுள் ஐயன் வள்ளுவர் மேற்சொன்ன குறளில் குறிப்பிடுவது அந்தர்யாமி நிலையை. அடியார்களின் அகமாகிய தாமரையில் வீற்றிருக்கும் திருமாலின் திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இந்த பூமியில் நீண்ட நாட்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்வர்.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (7)


திருமாலிடம் எல்லாம் உண்டு, ஒன்றை தவிர. அவன் அநாதன். அவன் எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் நாதன் அவனுக்கு நாதன் கிடையாது. மஹாபலி சக்ரவர்த்தியிடம் இந்திரனுக்காக மூன்றடி நிலம் கேட்கப்போன குரளனான ஸ்ரீ வாமனன் தன்னை அநாதன் என்று கூறி அறிமுகப்படித்திக் கொள்கிறான். மஹாபலி 'அனாதை' என்று புரிந்துகொள்ள அவன் குரு சுக்ரசாரியார் வந்திருப்பவன் 'அனாதை' அல்ல; தனக்கு ஒரு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத, தலைவன் அதாவது நாதன் இல்லாத, திருமால் என்று புரிய வைக்கிறார்.


ப்ர ஹலாதனுக்கு கொடுத்த வரத்தின்படி அவன் பேரனான மஹாபலியை ஸ்ரீ வாமனன் கொல்லவில்லை. அதே காரணத்தினால் தான் ப்ரஹலாதனின் வழி வந்த பாணசுரனை ஸ்ரீ கிருஷ்ணரும் கொல்லவில்லை.

கலியுகமாகிய இன்றும், தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஸ்ரீ ஒப்பிலியப்பனை நாம் கும்பகோணம் அருகே திருவிண்ணகர் என்ற ப்ரசித்தி பெற்ற திவ்ய தேசத்தில் சேவிக்கலாம். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத திருமாலின் திருவடியை சேர்த்தவர்கள் தவிர மற்றவர்களுக்கு தங்கள் மனக்கவலை மாறாது என்கிறார் திருவள்ளுவர்.


கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை (9)


எவனொருவனின் தலை எண்குணதானின் திருவடிகளை வணங்கவில்லையோ அவனுக்கு ஐம்பொறிகளான கண், காது, வாய், மூக்கு, மெய் முதலியவற்றால் பயன் ஏதுமில்லை. இங்கு 'எண்குணத்தான்' எனும் சொல் 8 குணங்களையும் குறிக்கும் எண்ணிறைந்த குணங்களையும் குறிக்கும்.


ஸ்ரீமன் நாராயணன் அநேக கல்யாண குணங்கள் நிரம்பியவர். அதனாலேயே தமிழில் 'நம்பி' என்றும் வடமொழியில் 'குணபூர்னர்' என்றும் அழைக்கபடுகிறார்.


ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், சக்தி, தேஜஸ், சௌசீல்யம், வாத்சல்யம் என்கிற முக்கிய 8 குணங்களும் மேலும் மார்தவம், ஆர்ஜவம், சௌஹர்தம், சாம்யம், காருண்யம், மாதுர்யம், காம்ப்ஹீர்யம், ஔதார்யம், சாதுர்யம், ச்தைர்யம், தைர்யம், சௌர்யம், பராக்கிரமம், சத்யகாமம், சத்யசங்கல்பம், க்ருதித்வம், க்ருதங்க்னதை, மற்றும் பலப்பல கல்யாண குணங்களை தன்னிடையே கொண்டான் கொண்டல்வண்ணனான கண்ணன், கேசவன், மாதவன் என பல நாமம்கள் கொண்ட திருமால். இந்த கல்யாண குணங்கள் பற்றித்தான் திருவள்ளுவர் மேற்படி குறளில் விளக்கியுள்ளார்.


இன்னும் கடவுள் வாழ்த்து அதிகாரத்திலுள்ள மற்ற குறள்களையும் விரிவாக சொல்லலாம். ஆயினும் மற்ற அதிகாரங்களும் இருப்பதால் அவற்றை பார்ப்போம்.


மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு (61௦)

மடி இன்மை அதாவது சோம்பலில்லாமை பற்றி பாடவந்த வள்ளுவர், மஹா விஷ்ணு வாமனனாக வந்து பின்னர் நெடு நெடுவென வளர்ந்து த்ரிவிக்ரமனாக விண்ணையும் மண்ணையும் தன் திருவடிகளால் அளந்தது போல சோம்பல் இல்லாத மன்னவன் இந்த உலகம் முழுவதையும் அடைவான் என்கிறார்.

அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் குறள்கள் கண்ட நாம் காமத்துப்பாலில் வள்ளுவரின் வைணவ குரல்களைப் பார்ப்போம்.


தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு (1103)


புணர்ச்சி மகிழ்தல் பற்றி பாடவந்த வள்ளுவர், தன் காதல் மனைவியின் தோளில் தூங்குவதைவிட பங்கஜாக்சன் என்றும் தாமரைக்கண்ணன் என்றும் பெயர்க் கொண்ட திருமாலின் வைகுந்தம் இனிதாக இருக்குமோ? என்று கேள்வி எழுப்புகிறார் காதல் வசப்பட்ட வள்ளுவர். இங்கு காதலை உயர்த்தி சொல்ல விரும்பும் போதும் தன் அடிப்படை குணத்தை காட்டும் விதமாக வைணவர்களின் ஒரே இலக்கான ஸ்ரீ வைங்குந்தம் எனும் திருநாட்டைப் பற்றித்தான் குறிபிடுகிறார்.


அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)


தலைவனுக்காக காத்திருக்கும் தலைவி பகற்பொழுதுப்போய் மாலைப்பொழுது வந்ததன் அடையாளமாக சொல்லுவது யசோதை இளஞ்சிங்கம் கண்ணன் மாடுமேய்க்கும் போது ஊதும் புல்லாங்குழலைத்தான். இங்கே கண்ணனே தலைவன் ராதை முதலிய கோபிகைகளே தலைவிகள். மாலைப்பொழுது வந்துவிட்டது, தூரத்தில் கண்ணன் குழலோசை கேட்கிறது, ஆனால் கண்ணன் இன்னும் இங்கே வரவில்லை. கோபிகைகள் காத்திருக்கிறார்கள் கண்ணனுக்காக.


முடிவுரை


திருவள்ளுவரின் திருக்குறள் எனும் அமுதில் சில பருக்கைகளை நாம் பதம் பார்த்தே அவர் உள்ளக்கிடக்கை அறிந்துக் கொண்டோம்.

ஒரு காலதில் தொடர்ந்து 10 குறள்களைக்கூட சொல்லத் தெரியாமல் வெட்கி தலை குனிந்த அடியேன், (இப்போது எவ்வளவு குறள்கள் சொல்லத்தெரியும் என்று தயவு செய்து கேட்டு விடாதீர்கள், அது பரம ரகசியம்) இன்று ஓரளவு படித்து, ஸ்ரீ வைஷ்ணவ சிகாமணியான திருவள்ளூர் இயற்றிய திருக்குறளைப் பற்றி ஒரு சில வார்த்தைகளை இங்கு பணிவோடு சமர்பிக்க காரணமான ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடிகளுக்கு இந்த பதிவை சமர்ப்பித்து திருமாலுக்கும் திருவள்ளுவருக்கும் பல்லாண்டு பாடி அமைகிறேன்.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து.

Saturday, March 17, 2012

கர்ண கவசம்

கர்ணன், மகாபாரதத்தில் வெகுஜனகங்களின் இரக்கத்திற்கு பெரிதும் பாத்திரமானவன். இதுவே அவனது உண்மையான கவசம். அதை உடைக்கும் முயற்சியே இந்த பதிவு.

கர்ணன் என்றதும் பலரின் நினைவுக்கு வரும் மாயத் தோற்றம், அவன் ஓர் மாவீரன், கொடை வள்ளல், தியாகி, செஞ்சோற்று கடனுக்காக தன் சகோதரர்களையே போரில் எதிர்த்தவன் என்பதுதான். இந்த மாயையை விலக்க முயலுவோம்.

வீரம்!!!

வனவாசத்தின்போது, துரியோதனன் பாண்டவர்கள் காட்டில் துன்புறுவதை ரசிக்க விரும்பி, பசு மாடுகளை கணக்கிடும் சாக்கில் கர்ணன், துச்சாதனன் மற்றும் பெரும் படைகளுடன் சென்றான். காட்டில் கௌரவர்களுக்கும் கந்தர்வர்களுக்கும் நடந்த போரில் கர்ணன் உட்பட அனைவரும் படுத்தோல்வி அடைந்தார்கள். தருமபுத்திரன் உத்தரவின் பேரில் பீமனும் அர்ஜுனனும் கர்ணனையும் துரியோதனனையும் மற்றவர்களையும் மீட்டார்கள். அவமானம் தாங்காத துரியோதனன் தற்கொலை செய்துக்கொள்ள முயன்ற போது, கர்ணன் சபதம் செய்தான். "அர்ஜுனனை எப்படியும் கொல்வேன், அதுவரை யார் என்ன கேட்டாலும் கொடுப்பேன்" என்று. இப்படித்தான் கர்ணனின் கொடுக்கும் வழக்கம் ஆரம்பித்தது.

அர்ஜுனன் அஞ்ஞாதவாசம் முடிந்தவுடன் நடந்த போரில் தன்னன்தனியே பீஷ்மர், துரோணர், கர்ணன், அஸ்வத்தாமா, துரியோதனன், துச்சாதனன், சகுனி என எல்லோரையும் தோற்கடித்தான். அப்போது எங்கே போயிற்று கர்ணனின் வீரம்? அர்ஜுனன் தனியே இருக்கும்போதே ஜெயிக்க முடியாத கர்ணன் பாரத போரில் அவனை கொல்வதாக சபதம் செய்தது துரியோதனனை திருப்தி படுத்தவே அன்றி வேறில்லை.

பாலகன் அபிமன்யுவிடம் தோற்ற மஹாரதர்களான துரோணர், கர்ணன், அஸ்வத்தாமா, துரியோதனன், துச்சாதனன், சகுனி, சல்லியன், முதலியோர் செய்வதறியாமல் திகைத்தார்கள். துரோணரின் ஆலோசனைப்படி அபிமன்யு எல்லாரோடும் ஒரே சமயத்தில் போரிடும் போது "மாவீரன்" கர்ணன் அபிமன்யுவின் பின்புறம் சென்று அவன் வில்லின் நாண் கயிற்றை அறுத்து தன் வீரத்தை முழுமையாய் வெளிப்படித்தினான்.

அடுத்தநாள் அர்ஜுனன் ஜயத்ரதனை கொல்ல சபதமிட்டு முன்னேறி சென்றபின், தருமர், அர்ஜுனனை கண்டு வர பீமனை அனுப்பினார். வழியில் கர்ணன் பீமனை எதிர்த்தான். பீமனால் தோற்கடிக்கப்பட்ட கர்ணன் மயங்கி விழுந்தான். அவனை காக்க தன் தம்பிகள் ஐந்து பேரை துரியோதனன் அனுப்பினான். விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகள் போல அவர்கள் பீமனால் கொல்லப்பட்டார்கள். கர்ணன் சிரமபரிகாரம் செய்துக்கொண்டு ஒரு வழியாக திரும்பவும் பீமனை எதிர்த்தான். மறுபடியும் தோற்று மயங்கி விழ கர்ணனின் தேர்ரொட்டி அவனை போர்க்களத்திலிருந்து அப்புறபடுத்தினான். அதற்குள் துரியோதனன் இன்னும் ஐந்து தம்பிகளை கர்ணன் துணைக்கு அனுப்ப அவர்களும் பீமனால் கொல்லப்பட்டார்கள். கர்ணன் திரும்பவும் போருக்கு வந்தான். திரும்பவும் தோற்று மயங்கி விழுந்தான். இதுபோல கர்ணன் ஏழு முறை பீமனிடம் தோற்று மயங்க அவனுக்கு துணையாக வந்த துரியோதனனின் 35  தம்பிகள் பீமனால் அந்த ஒரு பகல் பொழுதில் கொல்லப்பட்டார்கள். இதை சஞ்சயன் சொல்ல கேட்ட திருதராஷ்ட்ரன் அழுது புலம்பினான். "இந்த கர்ணனின் வில்லை நம்பி பாண்டவர்களை பகைத்துக்கொண்ட துரியோதனன் இப்போது என்ன சொல்கிறான். கர்ணனை காக்க என் பிள்ளைகள் 35 பலியானார்களே" என்று கதறினான். இப்படித்  தன் உயிரை காத்துக்கொள்ள உயிர் தோழனின் 35 சகோதரர்களை பலி வாங்கிய மாவீரன் தான் கர்ணன்.

துரோணர் மாண்டவுடன் கர்ணன் தளபதியாக பதவி ஏற்றான். அவன் கண் முன்னாலே அவன் பிள்ளையை அர்ஜுனன் கொன்றான். அதுவும் "தனியாக நின்ற அபிமன்யுவை நீங்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கொன்றீர்களே! இப்போது உன் பிள்ளையை நான் உன் கண் முன்பே கொல்லப்போகிறேன். முடிந்தால் உன் பிள்ளையை காப்பாற்றிக்கொள்." என்று அறைகூவல்விடுத்து பின் கர்ணன் மகன் வ்ருக்ஷஷேணனை கொன்றான்.

ஆண்களிடம் இப்படி வீரம் காட்டிய கர்ணன், பெண்ணான திரௌபதியை சபையில் அவமானப்படுத்த முயன்ற விதம் பற்றி பதிவு செய்ய என் விரல்கள் கூசுகின்றன.

இப்படி கர்ணனின் வீரத்தைப் பற்றி இன்னும் எவ்வளவோ எழுதலாம், ஆனால் வலைபதிவில் இடம் போதாது. ஆகையால் அவனது மற்ற குணாதிசயங்களை(!) பார்ப்போம்.

கொடை

கர்ணன் கொடுத்ததை விட வாங்கியது அதிகம். முதலில் அங்க தேசத்தை துரியோதனிடம் யாசகமாக வாங்கினான். பின்னர் பிராமணன் என்று பொய் சொல்லி வில்வித்தையை ஸ்ரீ பரசுராமரிடம் திருட்டுத்தனமாக வாங்கினான். (இங்கே கவனிக்க வேண்டியது, தான் ஒரு தேரோட்டி மகன் என்று நேர்மையாக சொல்லியிருந்தால் பரசுராமர் சந்தோஷமாக சொல்லிகொடுத்திருப்பார். அவரது கோபம் க்ஷத்ரியர்கள் மீதே, மற்ற எல்லோரையும் அவர் அரவணைத்தார். அவரை ஏமாற்றியது கர்ணனின் குறுக்கு புத்தியே)

வாங்குவதில் மட்டுமல்ல பண்டமாற்று வியாபாரத்திலும் வல்லவன் கர்ணன். முன்பே கண்டபடி கர்ணன் செய்த சபதம் "அர்ஜுனனை கொல்வேன்; அது வரை யார் என்ன கேட்டாலும் கொடுப்பேன்" என்ற சபத்தினால் இந்திரன் கேட்டதும் தான் கவச குண்டலங்களை கொடுக்க வேண்டி வந்தது. இது நடந்தது பாண்டவர்கள் வனவாசத்தின் போதே. கர்ணன் மட்டும் பிறந்து முதல் அள்ளி வழங்குபவனாக இருந்திருந்தால் இந்திரன் எப்போதோ அவனிடமிருந்து கவச குண்டலங்களை வாங்கிருப்பான்.

கவசம் ஒரு தற்காப்பு பொருள். அதைக் கொடுத்துவிட்டு பதிலுக்கு இந்திரனின் சக்தி ஆயுதத்தை வாங்கிக்கொண்டான். சக்தி ஆயுதம் யாரையும் கொல்லக்கூடியது. அர்ஜுனனை கொல்ல அதை வாங்கியவன் போரில் துரியோதனன் உத்தரவுப்படி கடோத்கஜனை அதைக்கொண்டு கொன்றான்.

தன் தாய் குந்திக்கு வரம் கொடுதைப்பற்றி பார்ப்போம். முதல் வரம் நாகாஸ்திரத்தை மறுபடி விடக்கூடாது. போரில் வீரர்கள் ஒரு போதும் தோற்ற அஸ்திரத்தை மறுபடி விடமாட்டார்கள். கர்ணனிடம் இந்த வரம் கேட்டதிற்கு காரணமே அவன் வீரத்தில் உள்ள சந்தேகம்தான். எப்படியும் அர்ஜுனனை ஜெயிக்க வேணும் என்று பொறாமையே உருவெடுத்தவன் கர்ணன் என்று குந்திக்கு தெரியும், அதனால் தான் அந்த வரம் கேட்டாள். கர்ணன் எத்தனை முறை நாகாஸ்திரம் விட்டாலும் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனை காப்பாற்றியிருப்பார். இந்த நாகாஸ்திரமும் கர்ணன் தவம் செய்து பெற்றதில்லை. அர்ஜுனனை பழிவாங்க துடித்த ஒரு பாம்பு அம்பாக மாறி கர்ணனிடம் வந்து சேர்ந்தது. ஸ்ரீ கிருஷ்ணர் அனுமதி கொடுத்திருந்தால் அர்ஜுனன் தான் தவம் செய்து பெற்ற பாசுபத அஸ்த்திரத்தால் கர்ணனை எப்போது வேண்டுமானாலும் வீழ்த்தியிருக்கலாம்.

அர்ஜுனனை தவிர மற்ற நான்கு பாண்டவர்களை கொல்லக்கூடாது என்ற வரம் தருமர், நகுலன் மற்றும் சகதேவனை காக்க உதவியது என்னமோ உண்மைதான். அதற்க்கு பதில் செய்வது போல "கர்ணனை கொல்வேன்" என்ற அர்ஜுனன் சபதம் கர்ணனின் உயிரை பல முறை பீமனிடமிருந்தும் ஒரு முறை அபிமன்யுவிடமிருந்தும் காத்தது.

கடைசியில் தான் செய்த புண்ணியம் அனைத்தையும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு தானம் கொடுதைப் பார்ப்போம். கர்ம வினையே தீண்டாத ஸ்ரீ கிருஷ்ணருக்கு கர்ணனின் புண்ணியம் எதற்கு? கர்ணனின் பாவங்களை எல்லாம் தொலைத்த ஸ்ரீ கிருஷ்ணர் அவன் புண்ணியத்தையும் தொலைத்தால் தான் கர்ணனுக்கு முக்தி கிடைக்கும் என்பதால் தான் அப்படி செய்தார். இங்கேயும் கர்ணனின் பண்டமாற்று வியாபாரம் பெருத்த இலாபத்தை தான் கொடுத்தது. வெறும் புண்ணியத்தை கொடுத்துவிட்டு எளிதில் கிடைக்காத ஸ்ரீ கிருஷ்ணரின் விஸ்வரூபத்தை தரிசித்து முக்தியும் பெற்றான்.

செஞ்சோற்றுக்கடன்

துரியோதனனும் கர்ணனும் கொண்ட நட்பு கூடா நட்பாகும். அர்ஜுனன் மேலுள்ள பொறாமை கர்ணனை துரியோதனனினடம் தள்ள, பீமனிடம் கொண்ட பயமும் அர்ஜுனனின் வில்லாற்றலும் துரியோதனை கர்ணன் பாலிழுத்தது.

ஒரு வேளை கர்ணன் பாண்டவர்கள் பக்கம் வந்திருதால் ஹஸ்தினாபுர அரசு அவனக்கு கிடைத்திருக்கும் என்று சொல்வோர்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். கர்ணன் குந்தியின் மகனே தவிர பாண்டுவின் பிள்ளை இல்லை. குந்தியின் திருமணத்திருக்கு முன்பே பிறந்தவன். அவன் அரசனாவதை பீஷ்மர் ஒரு போதும் ஒத்துக்கொள்ளமாட்டார். அதே போல எதிரிகளான பாண்டவர்களை விட்டாலும், துரோகியான கர்ணனை துரியோதனன் சும்மா விட மாட்டான். கூட்டிக்கழித்து பார்த்தால் கூடாநட்பு தான் தெரிகிறதே தவிர செஞ்சோற்றுக்கடன் என்பது வெறும் அரசியல் சாயமே.

சுருங்க சொன்னால் கர்ணனின் பெருமைகளாக சொல்லப்படும் கவச குண்டலம், நாகாஸ்திரம், அங்க தேசம், செல்வம் என எல்லாமே பிறவியிலோ, தானாகவோ அல்லது தானமாகவோ அவன் பெற்றவைதான். அவனாக உழைத்து சம்பாதித்தவை என்று எதுவும் இல்லை நம் இரக்கத்தை தவிர.

மொத்தத்தில் அர்ஜுனன் என்ற புலியை பார்த்து சூடுப் போட்டுக்கொண்ட பூனை தான் கர்ணன். எல்லா உயிர்களையும் காக்கும் பரந்தாமன் ஸ்ரீ கிருஷ்ணன் புலியான அர்ஜுனனையும் காத்தான். பூனையான கர்ணனையும் காத்தான். அந்த ஸ்ரீ கிருஷ்ணன் எப்போதும் அடியார்களான நம்மையும் அவன் திருவடித் தாமரைகள்ப்பட்ட பாரத தேசத்தையும் காப்பான்.

ஒரு வேண்டுகோள்

நம் பாரத தேசத்தின் இரண்டு கண்களான ஸ்ரீமத் ராமாயணத்தையும் மஹா பாரத்தையும் அனைவரும் கசடற கற்க வேண்டும். திரைப்பட கதாநாயகரின்  பெருமையை பாதுகாக்க காப்பியத்தை எப்படி வேண்டுமானாலும் வளைக்கும்  "கர்ணன்" திரைப்படம் போன்ற குறுக்கு வழிகளை நாடாமல், மூல ஆதி இதிகாசங்களான வால்மீகி ராமாயணம் வியாச பாரதம் ஆகியவற்றை படிக்குமாறு பிராத்திக்கிறேன். "கர்ணன்" திரைபடத்தில், விட்டிருந்தால் தமிழ் திரைப்பட மரபுப்படி அர்ஜுனனை போரில் கொன்றாலும் கொன்றிருப்பார்கள், அந்த மட்டில் மூல மகாபாரதத்தையோட்டி படமேடுததற்க்கு நன்றி.

தமிழில் கம்ப ராமாயணமும் வில்லி பாரதமும் கட்டாயம் படிக்க வேண்டிய பொக்கிஷங்கள். இன்னும் சுலபமான வழி வேண்டுவோர் ராஜாஜியின் ராமாயண மகாபாரத நூல்களையோ அல்லது சோ. ராமஸ்வாமி அவர்களின் ராமாயண மகாபாரத நூல்களையோ படிக்க வேண்டுகிறேன்.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து.